என் மலர்
தமிழ்நாடு
குடியரசு தின விழா- சென்னையில் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்
- சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- போக்குவரத்து போலீசார் இரவு பகல் பாராமல் வாகன சோதனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர் துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து லாட்ஜுகள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாளை முதல் 2 நாட்களும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளது. சந்தேகத்துக்கிடமாக தங்கி இருப்பவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகிறார்கள்.
குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து மாநிலங்களிலுமே விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மத்திய பாதுகாப்பு படையினருடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த சோதனை நடைபெற்று வருகிறது. வெளி மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் எப்போதும் இல்லாத வகை யில் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட பொதுமக்கள் கூடும் பஸ் நிலையங்கள் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் இரவு பகல் பாராமல் வாகன சோதனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சந்தேகத்துக்கிடமான இடங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.