என் மலர்
தமிழ்நாடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு முடக்குகிறது- செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன்சிங் ஆட்சியில் பல்வேறு புரட்சிகரமான மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அத்திட்டங்கள் 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்படி சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு பெறுகிற உரிமைச் சட்டம் ஆகிய இரண்டும் தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் முடக்கப்பட்டு, செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தகவல் கேட்டு 1 கோடியே 75 லட்சம் மனுக்கள் குவிந்து அதற்கு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, தலைமை தகவல் ஆணையத்தில் 8 தகவல் ஆணையர்களின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் 23,000 மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு 8 தகவல் ஆணையர்களின் பதவிகளை உடனடியாக நிரப்பவேண்டும் என்று ஆணையிட்டும், அவை நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றன. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வரவேண்டும், அரசு நிர்வாகத்தில் நடப்பதை அனைத்து குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டுவந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு முடக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.