என் மலர்
தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்- சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

- திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த உம்மா ஹமீது நாச்சியார் (வயது 62) என்ற பெண் பயணி தனது உடமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.