என் மலர்
தமிழ்நாடு
திமுகவை விமர்சித்துவிட்டு அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?- சீமான் கேள்வி
- 75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியலால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது.
- கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததும் காங்கிரஸ்தான்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது.
இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சுப.தமிழ்ச்செல்வன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம், 'விஜய்யின் அரசியல் நிலைப்பாடு பற்றி நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து பேசி உள்ளீர்களே என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
விஜய் கட்சியின் கொள்கை முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியமும், திராவிடமும் எப்போதும் ஒன்றாக முடியாது. விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக முடியும்.
திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வதாகும். தமிழினம் எங்கேயாவது பாதிக்கப்பட்டால் அதற்காக கண்ணீர் வடிப்பது தமிழ் தேசியமாகும். அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே திராவிடமாகும்.
75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியலால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது. அவர்கள் வாரிசுகளோடு வரிசை கட்டி நிற்கிறார்கள். அடுத்த வாரிசும் தயாராக இருக்கிறது. இப்படி இருக்கும்போது திராவிடத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் தேசியம். ஆனால் அதனை பேசி அரசியல் செய்து ஏமாற்றுவது திராவிடம். எனவே திராவிட கொள்கைகளை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். அது தம்பியாக இருந்தாலும் சரி, என்னை பெற்றெடுத்த தாய்-தந்தையாக இருந்தாலும் சரி. அவர்களும் எங்களுக்கு எதிரிதான்.
சினிமாவில் வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியாதோ, அதே போன்று தான் தமிழ் தேசிய மும், திராவிடமும் எப்போதுமே ஒன்றாக முடியாது.
விஜய் மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்த்து நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் பிரிந்து அவருக்கு செல்லுமா? என்று கேட்கிறீர்கள். அது தவறானது. நாம் தமிழர் கட்சிக்கு கூடுவது கொள்கை கூட்டம். நடிகை நயன்தாரா கடை திறப்புக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள். ஆகையால் கூட்டத்தை பற்றி பேச கூடாது. கூட்டம் என பார்த்தால் எனக்கு 36 லட்சம் மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். ரசிகர்கள் வேறு, கொள்கை போராளிகள் வேறு. விஜய் ரசிகர்கள் எனக்கு எப்படி வாக்கு செலுத்துவார்கள்?
அதேபோல் என்னுடைய வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது. எனவே நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை விஜய்யால் பிரிக்க முடியாது. விஜய் கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லை. அதில் முரண்பாடும் உள்ளது. எனவே அவர் கட்சியின் கொள்கைகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எழுதிக் கொடுப்பவர்களை மாற்ற வேண்டும். விஜய் கொள்கையை மாற்றினால் அவரை வாழ்த்துவோம்.
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்த காங்கிரசை பற்றியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அ.தி.மு.க. பற்றியும் விஜய் விமர்சித்து எதிர்ப்பு தெரிவிக்காததது ஏன்? இந்தியா ஏழ்மை நிலையில் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். காங்கிரஸ் தமிழகத்தின் வரலாற்று பகைவன். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை முதலில் கொண்டு வந்ததும் காங்கிரஸ்தான்.
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததும் காங்கிரஸ்தான். பா.ஜனதா செய்வது மதவாதம் என்றால் காங்கிரஸ் செய்வது மிதவாதமா? பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவதற்கு பல விஷயங்கள் உள்ளது.
விஜய் அதுபற்றி பேசாதது ஏன்? அ.தி.மு.க. என்ன புனிதமான கட்சியா? அக்கட்சி தலைவர் ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர் தானே. அந்த கட்சியை பற்றியும் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை. மேடையில் ரைமிங்காக பேசினால் மட்டும் போதுமா?
தமிழக வெற்றிக் கழகம் கொடி பற்றி விளக்கம் அளித்துள்ள விஜய் மஞ்சள்மங்களரமானது என்றும், சிவப்பு புரட்சியின் அடையாளம் என்றும் பேசி இருக்கிறார். விவசாயிகளின் குறியீடான பச்சை நிறம் புரட்சி இல்லையா?
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ளதை பார்த்து நிச்சயம் யாரும் அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. குறிப்பாக அண்ணன் திருமாவளவன் எங்களுக்கெல்லாம் பாடம் நடத்திய வாத்தியார். அரசியல் முதிர்ச்சி உள்ளவர். எனவே அவர் இது போன்று சிறுபிள்ளைத்தனமான முடிவை எடுக்க மாட்டார். 8 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு சீமான் என்ன செய்ய முடியும் என்று எல்லோரும் நினைக்கலாம். பல மாநிலங்களில் எங்களை விட குறைவான சதவீத வாக்குகளை பெற்ற கட்சிகளே பின்னாளில் ஆட்சியில் அமர்ந்துள்ளன. அதற்கு உதாரணமாக பா.ஜனதாவை கூறலாம். எனவே நாங்களும் ஆட்சி அதிகாரத்தை எட்டிப் பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.