search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது உதவுவதை சடங்கு என கூறுவதா? விஜய்க்கு சீமான் கண்டனம்
    X

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது உதவுவதை சடங்கு என கூறுவதா? விஜய்க்கு சீமான் கண்டனம்

    • 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.

    அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள் ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

    இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.நடிகர் விஜய் மிகப்பெரிய திரைப்பட கதாநாயகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் கூடுவார்கள். அதனால் போக்குவரத்தை சரி செய்வதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்படும். எனவே வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை.

    மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என கூறும் நடிகர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சந்திக்காதது ஏன்?

    பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என கவர்னர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை கவர்னர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

    இது மக்களாட்சி. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கவர்னர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.

    மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது.

    கேரள மீனவர்களையோ குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

    இளையராஜா நகையும் சதையும் உள்ள மனிதன் அல்ல அவர் இசை தெய்வம். அவர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மாபெரும் கலைஞன் தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×