என் மலர்
தமிழ்நாடு

என்னை விமர்சிக்க தி.மு.க., தி.க.விற்கு தகுதி இல்லை- சீமான்

- கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன.
மதுரை:
மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மீது ஆதாரமில்லாத, அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அவ்வளவுதான் அவர்களது நாகரீகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பது பெரியாரின் கோட்பாடு. ஆனால் அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற கேவலமான செயல்ளை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னையும், என்னை பற்றியும் பேச தி.மு.க.விற்கும், திராவிடர் கழகத்திற்கும் தகுதி இல்லை.
பாலியல் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.
இந்த வழக்கில் பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை.
கம்யூனிஸ்டு கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் 12 சீட்கள் பெற்ற நிலையில் தற்போது அவர்களது நிலைமை மோசமாக உள்ளது. எந்த பிரச்சனைகளுக்கும் கம்யூனிஸ்டு கட்சி போராட முன்வரவில்லை. மும்மொழி கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட வற்றில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு தெரியவில்லை. திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டுமென செயல்படுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை உள்ளது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக என்னையும், என் குடும்பத்தையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அதனை எல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன்.
இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். தி.மு.க. தலைவர்களும், வாடகை தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்சனையை பேசி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.