என் மலர்
தமிழ்நாடு
இளையராஜாவை அவமதித்த ஜீயர் மன்னிப்பு கேட்க வேண்டும்- சீமான்
- ஆகம விதி, மரபு, பழக்கம் என்பதெல்லாம் தமிழர்களை வெளியேற்ற நடக்கும் சதியேயாகும்.
- இசையாகவே வாழும் இளையராஜா கருவறைக்குள் நுழைவதைத் தடுப்பதை அந்த இறைவனே விரும்பமாட்டார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் வழிபாடு செய்ய சென்ற இளையராஜா கருவறைக்கு முன்பிருந்த மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழின மூதாதை எங்கள் குலமகள் ஆண்டாள் பெருமாட்டியை வழிபடச் சென்ற இளையராஜா அவமரியாதை செய்த திருவில்லிபுத்தூர் ஜீயரின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்தைத் தாழ்த்தும் கொடுஞ்செயலாகும். இதனை இனமானத்தமிழர்கள் ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள். தன் ஈடு இணையற்ற இசையால் தமிழர்களின் வணக்கத்திற்குரியவரான இளையராஜாவை, ஆண்டாளின் மகனான இளையராஜாவை வழிபடத் தடுக்கும் உரிமை யாருக்குமில்லை.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆண்டாள் தமிழின முன்னோர்; அவர் பாடிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் தமிழிலேயேதான் இருக்கின்றன. அவரது வழிபாட்டுத்தலத்தில் தமிழில் ஓதுவதையும், தமிழர்கள் வழிபாடு செய்வதையும் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரிசாவிலுள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலின் கருவறையருகே அனுமதிக்கப்படாததுபோல, இசைஞானி இளையராஜா திருவில்லிபுத்தூர் கோவிலின் கருவறையருகே இருந்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாதது ஏற்கவே முடியாத கொடிய சனாதனமாகும்.
இளையராஜாவுக்கும், ஆண்டாள் கோவிலை கட்டிய தமிழின முன்னோன் மாமன்னர் கோனேரிமை கொண்டான் குலசேகர பாண்டியனுக்கும்தான் தொடர்பு உண்டே தவிர, இளையராஜாவைக் கருவறைக்குள் நுழையாதே என்றுச்சொல்லும் ஜீயர்களுக்கும் ஆண்டாள் கோவிலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டிலும் பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கிற வருணாசிரமக் கோட்பாடுகள் மனிதத்துக்கே எதிரான இழிசிந்தனையாகும்.
இதனை எதிர்த்தே தமிழின முன்னோர்கள் இந்நிலத்தில் சமர் செய்திருக்கிறார்கள். சமயப்புரட்சி செய்த எங்கள் முன்னோர்கள் வள்ளலாரும், வைகுந்தரும், சிவவாக்கியரும் ஆன்மீகத்தோடு வர்ணாசிரம எதிர்ப்பையும் சேர்த்தே முன்வைத்திருக்கிறார்கள்; சமயத்தோடு, சமத்துவத்தையும் சேர்த்தே பேசியிருக்கிறார்கள். அத்தகைய நிலத்தில் நிகழ்ந்தேறும் இத்தகைய அநீதிகள் ஒட்டுமொத்த இனத்துக்குமேயான பேரவமானமாகும்.
சமத்துவம், சமூக நீதி, சமதர்மம் என்றெல்லாம் பேசி வரும் திமுகவின் ஆட்சியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களிலே சமத்துவமின்மையும், சனாதனக்கொடுமைகளும் நிகழ்ந்தேறுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கத்தில் பெரியார் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதாகக் கூறிப் பெருமிதம் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தம்முடைய ஆட்சியில் இளையராஜா கருவறைக்கு அருகேயுள்ள மண்டபத்துக்குள்ளேயே நுழைய முடியாதது வெட்கக்கேடானதாகும்.
ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதியதற்காக முத்தமிழ்ப்பேரறிஞர் வைரமுத்துக்கெதிராக அடாவடித்தனம் செய்த திருவில்லிபுத்தூர் ஜீயருக்கு ஆதரவாக நாணமின்றி நின்ற திமுக, இன்றைக்கு யார் பக்கம் நிற்கப் போகிறது? இளையராஜாவின் பக்கமா? திருவில்லிபுத்தூர் ஜீயர் பக்கமா?
ஜீயர்களுக்கு பாதப்பூஜை செய்து பரிகாரம் தேடும் திமுகவின் தலைவர் பெருமக்கள் இளையராஜாவுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு எதிராக அறச்சீற்றம் கொள்ளாது இருப்பார்கள் என்றால், அதைப் போல ஒரு இழிநிலை வேறுண்டா?
ஆண்டாள் கோவில் மரபுப்படி, வழக்கப்படி தான், இளையராஜா வெளியேற்றப்பட்டார் என்று தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையே கூறுவது பெருங்கொடுமையாகும். அந்த மரபையும், பழக்கத்தையும் உருவாக்கியர்கள் யார்? ஆகமவிதி என்று பாஜக கூறுவதற்கும், மரபு – பழக்கம் என்று திமுக கூறுவதற்கும் என்ன வேறுபாடு உள்ளது? ஆகம விதி, மரபு, பழக்கம் என்பதெல்லாம் தமிழர்களை வெளியேற்ற நடக்கும் சதியேயாகும்.
ஆண்டாள் கோவில் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானதே அன்றி, இளையராஜாவை வெளியேற சொல்பவர்களுக்கும் ஆண்டாள் கோவிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இசையாகவே வாழும் இளையராஜா கருவறைக்குள் நுழைவதைத் தடுப்பதை அந்த இறைவனே விரும்பமாட்டார்.
எனவே, தமிழ் மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற தமிழ்ப்பெரும் கலை அடையாளம், இசை இறைவன் இளையராஜாவை கருவறைக்கு அருகேயிருந்த மண்டபத்திலிருந்து வெளியேறச் செய்த திருவில்லிபுத்தூர் ஜீயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணவோட்டமாகும்.
ஆகவே, இளையராஜாவை அவமதித்த திருவில்லிபுத்தூர் ஜீயர் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இசை இறைவன், ஆண்டாளின் மகன் ஐயா இளையராஜா அவர்களை அவமதித்த திருவில்லிபுத்தூர் ஜீயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும்!திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் வழிபாடு செய்ய சென்ற ஐயா இளையராஜா அவர்களைக் கருவறைக்கு முன்பிருந்த மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது கடும்… pic.twitter.com/CQvk3aZT2R
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) December 17, 2024