என் மலர்
தமிழ்நாடு
பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? சீமான்
- சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா?
- இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு கொட்டப்பட்டது தொடர்பாக மாநில அரசிடம் பல முறை கூறியுள்ளேன். சோதனைச்சாவடி தாண்டி எப்படி இங்கு வந்தது. தம்ழகத்தில் மருத்துவ கழிவு கொட்டப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது.
நாடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
வெளியே செல்ல வேண்டும் என்றால் அச்சமாக உள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. செவிலியர்களின் கோரிக்கை ஏற்கவில்லை. விவசாயிகள், மருத்துவர்கள் பல போராட்டம் நடத்துகிறார்கள்.
மாணவர்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தி.மு.க. நல்லாட்சி கொடுக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். வெள்ள பாதிப்பு குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை.
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் வையுங்கள்.
ஜல்லிகட்டு போட்டிக்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம். எதற்கு அவர் பெயர் வைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் எந்த நச்சு திட்டமாக இருந்தாலும் அதில் கருணாநிதி கையெழுத்து போட்டு இருப்பார்.
பெருமைமிகு அடையாளங்களை மூடி விட்டு, அனைத்திற்கும் கலைஞர் பெயரை சூட்ட தி.மு.க. அரசு நினைக்கிறது. தி.மு.க. சாதனைகளை போர் பரணி பாட வேண்டும். சட்டம், ஒழுங்கி பிரச்சனை உள்ள நிலையில் தி.மு.க.வின் போர் பரணியை கேட்க நான் தயாராக இருக்கிறேன்.
வேல்முருகருடன் இணைந்து பணியாற்ற அழைத்தேன். அப்போது தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று என்னை அழைத்தார். ஏனெனில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு பாதுகாப்பு இருக்காது. கட்சியை வளர்க்க முடியாது என்று கூறினார்.
அதனால் தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று அழைத்தார். நீங்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் தினகரனுடன் கூட்டணி எதற்கு? தி.மு.க.வுடனே கூட்டணி அமைக்கலாமே என்று நான்தான் கூறினேன்.
நான் இஸ்லாமியரின் ஓட்டை பொறுக்க நடந்து கொள்கிறேன் என்கிறார். என் தலைவன் மீது ஆணையாக சொல்கிறேன். இதுவரை இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டது இல்லை. இனிமேலும் போடுவார்களா என்று தெரியாது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை நாங்கள் பா.ஜ.க.வின் பி டீம். நான் ஏன் பி டீம் ஆனேன். ஏ டீமாக தி.மு.க. இருப்பதால் நான் பி டீம் ஆகி விட்டேன்.
இந்த நாட்டில் தீர்ப்புகள்தான் சொல்லப்படுகிறது. நீதி வழங்கப்படுவதில்லை. இந்த நாட்டில் தீர்ப்பு மன்றங்கள் தான் உள்ளது. நீதிமன்றங்கள் கிடையாது. வர்கீஸ் பானு வழக்கில் கூட அனைத்து குற்றவாளிகளும் விடுதலை ஆகி விட்டனர்.
இடஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும். பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? பா.ஜ.க.விற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது.
சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா? சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம். இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.
திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை? முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை? உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா? உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.