என் மலர்
தமிழ்நாடு
7 வயதில் முயற்சி.. 15 வயதில் சாதனை.. 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்
- இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்திடம் மாலைமலர் சார்பில் நேர்காணல் எடுத்தோம்.
- 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள ஷ்ரவந்த் தனது எழுத்தாளர் பயணம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
15 வயதில் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், தொகுப்பாளராகவும் பன்முகத் திறனுடன் வளம் வரும் இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்திடம் மாலைமலர் சார்பில் நேர்காணல் எடுத்தோம்.
அப்போது, இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள ஷ்ரவந்த் தனது எழுத்தாளர் பயணம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசியதாவது:-
எனக்கு 7 வயது இருக்கும்போது தான் புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. ஒரு முறை எனது தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது சாக்லேட்டிற்கு பதில் இரண்டு புத்தகங்களை வாங்கி வந்தார். அதுவரை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
ஒரு நாள் அந்த புத்தகத்தை படிக்கலாம் என்று திடீரென தோன்றியது. ராணுவம் தொடர்பான புத்தகம் அது. எனக்கும் ராணுவம் மீது ஆர்வம் இருந்ததால் அந்த புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது. அப்படி தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனவும் உருவானது.
7 வயது முதல் 10 வயது வரை நிறைய புத்தகங்களை படித்தேன். சுமார் 450க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளேன். பல வகை புத்தகங்கள், பல ஆசிரியர்களின் புத்தகங்களை வாசித்துள்ளேன்.
10 வயதிற்கு மேல் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, கொரோனா லாக்டவுன் காலங்களில் நிறைய நேரம் இருந்தது. அப்போது, ஏன் எழுத முயற்சிக்க கூடாது என்று டைரியில் கதையாக எழுத ஆரம்பித்தேன். 44 சிறு கதைகளை எழுதினேன்.
அப்போதுதான் என் தந்தை ஏன் இதனை புத்தகமாக வெளியிடக்கூடாது என்று கேட்டார். முதலில் தயங்கினேன். பிறகு சரி அதையும் பார்ப்போம் என்று நான் எழுதிய கதைகளை கொண்டு வேறு ஒரு கதையின் கருவை உருவாக்கினேன். பிறகு, கதைக் கருவை முழுமையாக்கினேன். ஆரம்பத்தில் பதிப்பாளர்கள் என் புத்தகத்தை வெளியிட தயங்கினர். பிறகு, என் மீது நம்பிக்கை வைத்து வெளியிட்டனர்.
இப்படி இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். முதல் புத்தகம் 2021ல் தி அபிஸ்மல் தீப் அண்டு அதர் ஸ்டேரீஸ் என்கிற புத்தகத்தை வெளியிட்டேன்.
பிறகு, தி மேஜிக்கல் பிளிட்ஸ், தி டீவியஸ் பேர்சன், தி ஷேடோ லார்ஜனிஸ்ட் ஆகிய புத்தகங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டேன்.
இந்த ஆண்டு எனது 5வது புத்தகமாக தி டிடக்டிவ் டைலமோ என்கிற புத்தகத்தை வெளியிட்டிருப்பதில் மகிழ்ச்சி.
ஒரு பக்கம் படிப்பு, ஒரு பக்கம் எழுத்தாளர் பயணம். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எனது வேலைகளை முதலில் பட்டியலிட்டு விடுவேன். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த பிறகு, படிப்பதற்கும், எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கிவிடுவேன். அதன் பிறகு, வீட்டு பாடங்களையும், பாடங்களை படிப்பதையும் முடித்து விடுவேன். இவ்வாறு நேரம் ஒதுக்குவதால்தான் என்னால் அனைத்தையும் முடிக்க முடிகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆளுநர் உள்ளிட்டோரை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர்கள் எனக்கு நிறைய யோசனைகளை தந்துள்ளனர். அதனை என் வாழ்வில் பொருத்த முயற்சிக்கிறேன். அது எனக்கு பல இடங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
எனது நண்பர்கள் இரண்டு பேர் என்னை பார்த்து உத்வேகமடைந்து இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அதை எனது சாதனையாகவும் நான் கருதுகிறேன்.
இந்த தருணத்தில் எனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
எனது இறுதி காலம் வரை நான் புத்தகங்களை வாசிக்கவும், எழுதுவதையும் நிறுத்த மாட்டேன். அது என்னுடைய பேஷன். எதிர்காலத்தில் ஐஐடியில் சேர விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.