என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
- 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
- பல்வேறு நகரங்களுக்கு 12 ஆயிரம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கேள உள்ளன. பொங்கல் திருநாளையொட்டி 14,15,16 ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை உள்ள நிலையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் அரசு விடுமுறைவிட்டால் 18,19 (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்களோடு மொத்தம் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
17-ந்தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கொண்டாட திட்டமிட்டுள்ளவர்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. அரசு பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. பிற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 6-ந்தேதி முதல் முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். சிறப்பு பேருந்துகள் 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 12 ஆயிரம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. தினசரி இயக்கக்கூடிய 2092 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் பயணிகள் நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் பஸ்கள் சென்றடையும் வகையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யவும் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணம் மேற்கொள்பவர்கள் குழப்பம் இல்லாமல் பயணத்தை தொடர போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமை செயலகத்தில் 6-ந்தேதி (திங்கட்கிழமை) போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார்.