என் மலர்
தமிழ்நாடு

இந்தியாவில் அதிக விவாகரத்து வழக்குகள் பதிவாகும் மாநிலம் - முதலிடம் எது தெரியுமா?

- கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
- கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னை:
பணத்தை வாரி இறைத்து ஜாதகம், ஜோதிடம் என பொருத்தம் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மூலம் தீர விசாரித்து நடத்தப்படும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இளம்ஜோடிகளில் சிலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டையோடு பிரிந்து செல்வதும் அரங்கேறி வருகிறது. காதல் திருமணம் செய்தவர்களிலும் சிலர் பிரிந்து விடுகிறார்கள்.
ஒளிவு மறைவு இல்லாத கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுக்குள் தனி உரிமை எனும் புது கலாசாரத்தை புகுத்தி விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்தும் அளவுக்கு பல தம்பதியர் வந்து விட்டதும் வேதனைக்குரிய விஷயம்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
தமிழகத்தில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் எகிறிக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் ஏற்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில்தான் சென்னையில் ஏற்கனவே இருந்து வந்த குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குடும்பநல கோர்ட்டுகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.
தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல கோர்ட்டுகளில் இந்த ஆண்டு (2024) வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாக சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை.
மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரத்து 240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் ஆகின.
ஆனால், தற்போது (2024) 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் 6-வது இடத்தில் இருக்கிறது.
2-வது இடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் உத்தரபிரதேசமும் உள்ளது. மேற்குவங்காளம் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவில் விவாகரத்து கோருவோரில் 25 முதல் 35 வயதுடையோர் 50 சதவீதமும், 18 முதல் 25 வயதுடையோர் 35 சதவீதமும், 35 வயதுக்கு மேல் 15 சதவீதமும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதியரை மீண்டும் பரஸ்பர புரிதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பநல கோர்ட்டின் முக்கிய நோக்கம். தவிர்க்க முடியாத சூழலில் தான் விவாகரத்து என்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த கோர்ட்டின் மையக்கருத்து.
இந்த அடிப்படையில் தான் நன்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் விவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், இருதரப்பும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.
படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையும் இன்றி வாழ முடியும் என்ற இளம்பெண்களின் அசட்டு தைரியம் திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிர் முளையிலேயே கருகும் அபாயத்தை உருவாக்கி விட்டது.
வாழ்க்கை வாழ்வதற்கே. சண்டை சச்சரவு எதுவானாலும் விவாகரத்து தீர்வு இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போது தான் விவாகரத்து எனும் நோயை விரட்ட முடியும்.