என் மலர்
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது

- அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும்.
- 2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 1-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான உத்தரவை தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் பிறப்பித்து உள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும். இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து முதல் வகுப்போ அல்லது பிற வகுப்புகளிலோ அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க, வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும்.
2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.