search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது- புதிய திட்டங்களை அறிவிக்க திட்டம்
    X

    தமிழக அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது- புதிய திட்டங்களை அறிவிக்க திட்டம்

    • தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் சட்டசபை தேர்தலின்போது அறிவித்து விடுபட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த பட்ஜெட் தி.மு.க.வின் 2026-ம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு ஒரு முன்னோடியாகவும் இருக்கும்.

    சென்னை:

    தமிழக அரசின் பட்ஜெட், வருகிற பிப்ரவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க. அரசின் 4-வது பட்ஜெட் ஆகும். தமிழக சட்டசபைக்கு 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் ஆண்டு (2025) தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்தான் முழு பட்ஜெட்டாக இருக்கும். 2026-ம் ஆண்டு தாக்கல் செய்வது இடைக்கால பட்ஜெட் தான்.

    எனவே தமிழக அரசு, தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.

    இதுதவிர தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவர்களின் திறன் வளர்க்க நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்றி உள்ளது.

    ஆனால் தேர்தலில் கூறியபடி வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் திட்டம், 30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் சட்டசபை தேர்தலின்போது அறிவித்து விடுபட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் விதமாக புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்த பட்ஜெட் தி.மு.க.வின் 2026-ம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு ஒரு முன்னோடியாகவும் இருக்கும்.

    இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகையை ரூபாய் ஆயிரத்தில் இருந்து அதிகரிப்பது மற்றும் இன்னும் கூடுதலான பெண்களை அந்த திட்டத்தின் கீழ் கொண்டு வருவது என பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஏதாவது பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா? என்று அரசு ஊழியர்களும் காத்திருக்கின்றனர்.

    இது போன்ற திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் அந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    எனவே தமிழக அரசு, எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றுவது, அதற்கான நிதிகளை ஒதுக்குவது என்பது குறித்து துறை ரீதியான ஆலோசனையில் இறங்கி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் செயலாளர்கள் தலைமையில் அதிகாரிகள் குழு பட்ஜெட் தயாரிப்பில் தங்களது கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளனர்.

    எனவே சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    இந்த கூட்டம் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன்பின் மீண்டும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி விடும். எனவே பட்ஜெட் தயாரிப்பதற்கான பணியில் தமிழக அரசு இப்போதே முழு அளவில் ஈடுபட தொடங்கி உள்ளது.

    Next Story
    ×