என் மலர்
தமிழ்நாடு

சிறுபான்மை மக்களின் சொந்த வீடு தமிழ்நாடு: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

- ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும்.
- சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது திராவிட மாடல் அரசுதான்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்கின்ற இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புனித ரம்ஜான் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும். அதை பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை. ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால், இன்னும் நூறு முறை கூட மீண்டும், மீண்டும் நாங்கள் ரம்ஜான் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே இருப்போம்.
இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் உங்களுக்கு சொந்த வீடு போல இருக்கின்ற ஒரு மாநிலம் அப்படியென்றால், அது நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது நம்முடைய திராவிட மாடல் அரசுதான். அதற்கு உங்களிடம் இருக்கின்ற அந்த மகிழ்ச்சியும், உணர்வும், பாசமுமே சாட்சி.
திராவிட இயக்கத்துக்கும்– இஸ்லாமிய மக்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கிய உறவு கிடையாது.பெரியவர் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடைய காலத்தில் இருந்தே திராவிட இயக்கம் இஸ்லாமிய மக்களுடைய அன்பை பெற்று செயல்பட்டு வருகின்றது.
இன்றைக்கு கலைஞர் வழியில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், இஸ்லாமிய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று வருகிறார். நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததுமே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் நம்முடைய முதலமைச்சர்.
முத்தலாக் சட்டம், என்.ஆர்.சி, இப்படி வருஷா வருஷம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால், அதை எல்லாம் இந்தியாவிலேயே கடுமையாக எதிர்க்கின்ற ஒரு இயக்கம், ஒரு மாநிலம் ஒரு அரசு என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான், நம்முடைய முதலமைச்சர்தான்.
குறிப்பாக, இன்றைக்கு ஒரு புது பிரச்சினையை புதிதாக கையில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் வக்ஃப் வாரிய திருத்த மசோதா என்று ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களிடம் இருந்து அபகரிக்கப்படுகின்ற அபாயத்திற்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, வக்ஃப் வாரியங்களுக்கு ஒன்றிய அரசு சொல்கின்ற ஆட்களைதான் நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாத நபர்களையும், வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக் கூடிய சூழல் உருவாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய தலைவர், இந்த சட்டத்தை துவக்கத்திலிருந்து கடுமையாக எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.