என் மலர்
தமிழ்நாடு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திருச்சி வருகை
- தி.மு.க. இளைஞரணி சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
- நூலகத்தில் 3000 நூல்கள் இடம் பெறுகிறது. ஒரே நேரத்தில் 20 முதல் 25 பேர் வரை அமர்ந்து படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை (சனிக்கிழமை) திருச்சிக்கு வருகை தருகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 1 மணிக்கு திருச்சி வந்தடையும் அவருக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கார் மூலம் துறையூர் புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் அங்கு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கலைஞர் சிலை அமைக்க வேண்டும் என்ற கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று துறையூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆளுயுர வெண்கல சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் பெரம்பலூர் பஸ் நிலையம் தர்மன் காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. அருண் நேருவின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த நூலகத்தில் 3000 நூல்கள் இடம் பெறுகிறது. ஒரே நேரத்தில் 20 முதல் 25 பேர் வரை அமர்ந்து படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாவட்ட திமுக சார்பில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் அவருக்கு தாரைதப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நொச்சியம், மணச்சநல்லூர், திருவெள்ளறை, புலிவலம், கரட்டாம்பட்டி, பகலப்பாடி, காளிப்பட்டி ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவரை வரவேற்று கட்சி கொடி தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.