என் மலர்
தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலினுடன் நேரடி விவாதத்துக்கு தயார்- ஆர்.பி.உதயகுமார் சவால்
- 2 கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.
- முதலமைச்சர் செய்த திட்டங்களை பேச தயாரா? என்று சவால் விடுத்தார்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று கூறியதாவது:-
மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டம் என்கிற பெயரிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோ நடத்தி வருவது தமிழக மக்களுக்கு பலன் தரவில்லை. இதுகுறித்து எடப்பாடியார் மக்களுக்கான கேள்விகளை அரசிடம் முன் வைக்கின்ற போது அதை கவனத்தில் எடுத்து செயல்படுத்த வேண்டுமே தவிர, எள்ளி நகையாடுவதும் வரம்பு மீறி பேசுவதும் நாகரீக அரசியலுக்கு ஏற்றவையாக இருக்காது.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடியார் ஆதாரத்தோடு சொல்லுகிற குற்றச்சாட்டுகளை எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று, மக்களை திசை திருப்புகிற வேலையில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். எடப்பாடியார் என்ன சொன்னார்? அரசு செலவிலே, அரசு பங்களிப்பிலே செயல்படுகின்ற திட்டங்களுக்கு நீங்கள் தொடர்ந்து உங்கள் தந்தையார் பெயரை சூட்டுகிறீர்கள், உங்கள் டிரஸ்டின் மூலமாக செய்யப்படும் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்க ஆட்சேபனை இல்லை, ஆனால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் திட்டங்களுக்கு உங்கள் தந்தையார் பெயரை இன்றைக்கு நீங்கள் தொடர்ந்து சூட்டுவதால் மக்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று மக்களின் எண்ணத்தை எடப்பாடியார் கேள்வியாக கேட்டு உள்ளார்.
எடப்பாடியார் முன்வைத்த அந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி யாரை பார்த்து உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது? என்று ஒரு தரம் தாழ்ந்த கேள்வியை கேட்கிற போது, அதற்கு எடப்பாடியார் நான் கடந்த நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், குடிநீர் திட்ட பணிகள், கால்நடை பூங்காக்கள், சாலை பணிகள், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டங்கள், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, மேட்டூர் அணை தூர்வாருதல், அம்மா திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறம் மேன்மை அடைய கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம், தடுப்பணை கட்டி அதன் மூலம் நீர்நிலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புள்ளி விவரத்துடன் என்னால் பேச முடியும். முதலமைச்சர் செய்த திட்டங்களை பேச தயாரா? என்று சவால் விடுத்தார்.
ஆனால் இன்றைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியாரை பார்த்து சவால் விடுகிறார். 2 கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் மகனான உங்களோடு விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நாங்கள் தயார்?
எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும், அனுபவம் இன்னும் வரவில்லை. சவால் விடுவது என்பது முக்கியமில்லை, மக்களை காப்பது தான் முக்கியம் என்பதை உதயநிதி நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.