என் மலர்
தமிழ்நாடு
ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் 'சமுத்ரயான்' திட்டம்- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்த முடிவு
- ஆய்வு வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது.
- ஆய்வு வாகனத்தை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன.
சென்னை:
இந்தியா 9 கடற்கரையோர மாநிலங்களையும், 1,382 தீவுகளையும் உள்ளடக்கிய மிக நீண்ட கடற்கரை பரப்பை கொண்டிருக்கிறது. இந்த கடல் பகுதியின் ஆழ்கடலுக்குள் சென்று ஆராய்வதற்கும், வெளி உலகுக்கு தெரியாதவற்றை வெளிக்கொண்டு வருவதற்கும் மத்திய அரசு ''சமுத்ரயான்'' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. சமுத்ரயான் என்பதற்கு கடல் விமானம் என்பது பொருள்.
மத்திய அரசின் நீல பொருளாதார கொள்கையை ஆதரிக்கும் ஆழ்கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ''மத்ஸ்யா 6000'' என்ற ஆழ்கடல் ஆய்வு வாகனத்தில், ஆழ்கடல் துறையில் அனுபவமிக்க 3 பேர் ஆழ்கடலுக்குள் அனுப்பப்பட உள்ளனர்.
இதற்கான ஆய்வு வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது. இந்த வாகனம் ஆய்வு நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கருவிகள், உணர்திறன் தன்மை கொண்ட கருவிகள், நிபுணத்துவம் பெற்ற 3 பேர் ஆகியோருடன் இந்த ஆய்வு வாகனம் சுமார் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சென்று தாதுக்கள் போன்ற ஆழ்கடலின் வளங்களையும், பல்லுயிர் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்து அதனை ஆவணங்களாக சேகரிக்க இருக்கிறது.
இந்த ஆய்வு வாகனத்தை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம்பெறப்போகிறது. இந்த வாகனத்தின் சோதனை ஓட்டம் நடந்து வரும் நிலையில், இதுபற்றி புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் செயல்படுத்த உள்ளோம். அடுத்த மாதம் (டிசம்பர்) துறைமுகப் பகுதிகளில் இந்த வாகனத்தை பயன்படுத்தி சோதனை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.
மொத்தம் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு ஆழ்கடலில் சென்று இந்த ஆய்வை நடத்த உள்ளோம். இந்திய பெருங்கடலின் அதிகபட்ச ஆழமாக இதுதான் இருக்கிறது. அந்த அளவை எட்டி ஆய்வு செய்வோம்.
துறைமுக பகுதி ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததும், முதற்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆழ்கடலில் 500 மீட்டருக்குள்ளும், அதனைத் தொடர்ந்து படிப்படியாக 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.