search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை - சீமான் திட்டவட்டம்
    X

    நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை - சீமான் திட்டவட்டம்

    • சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி சீமான் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின் பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. அப்போது, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த வழக்கு திரும்ப பெறப்பட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டும்.

    இடைப்பட்ட காலத்தில் செட்டில்மென்ட் (settlement) வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க வேண்டும். மேலும், நடிகையின் பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நாம் தடை கேட்டு இருந்தோம். அதன் பிறகு வழக்கை முடித்து வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர்நீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு என்று பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

    நானே தான் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து இருந்தேன். இது தொல்லை. இதனை 15 ஆண்டுகளாக இழுப்பது நல்லதல்ல. இதனால் தான் நானே அந்த வழக்கை தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்தால் இது முழுவதும் பொய், அவதூறு, திட்டமிட்டு பரப்பப்பட்ட பழி. இந்த இடைக்கால உத்தரவை நான் வரவேற்கிறேன். தொடர்ந்து சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம். உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.

    Next Story
    ×