என் மலர்
தமிழ்நாடு
சீமானுக்கு அறிவுரை வழங்கிய திருமாவளவன்
- வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல.
- காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருத்தியல் விமர்சனங்களை வைப்பது அரசியலில் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு எல்லையை மீறுவது அரசியல் நாகரீகம் அல்ல. பெரியார் தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய ஒரு அடையாளம். இன்னும் சொல்லப்போனால் சமூக நீதிக்கான ஒரு தேசிய அடையாளம். இன்றைக்கு விளிம்பு நிலை மக்களால் போற்றக்கூடியவர். அவர் மீது வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் தவிர்ப்பது அவருடைய எதிர்காலத்திற்கும் அவருடைய அரசியலுக்கும் நல்லது.
சனாதன சக்திகள் கடந்த 10 ஆண்டுகளாக பெரியார் என்கிற பிம்பத்தை உடைப்பதற்கு நொறுக்குவதற்கு பகிரங்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அல்லது துணை போகின்ற வகையில் சீமானின் வாதம் அமைகிறது. அதுவும் ஆதாரமில்லாத விமர்சனங்களாக இருக்கின்றன. இந்த போக்கை அவர் கைவிடவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்று அறிவித்துள்ளது அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கி உள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரிதாக்குகிறோம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸ் திமுக-விற்கு அந்த வாய்ப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று. திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தீவிரமாக பணியாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.