என் மலர்
தமிழ்நாடு

விஜய் மீது எனக்கு எந்த சங்கடமும் இல்லை- திருமாவளவன்
- புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை.
- என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த மட்டத்தில் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை என்று வருகிற போது தலைவர், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவின் கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாக கொண்டு இருக்கிறோம். ஏன் என்றால் தலித் அடையாளத்துடன் இந்த இயக்கம் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தது. இது முழுமையாக அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்பதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை நாங்கள் 2007-ல் நிறைவேற்றினோம்.
தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் இந்த கட்சியில் அதிகார மையங்களுக்கு வரவேண்டும். பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்மானம். அப்படி வருகின்ற போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைவரின் கடமை. அந்த பொறுப்பிலே அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.
ஆகவே தான், ஆதவ் அர்ஜூனாவின் அண்மைகால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுகுறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் நிலையில் நான் இல்லை. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள வி.சி.க. புதிதாக உருவாகும் கூட்டணியில் இடம்பெறாது. புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை.
விஜய் மீது எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவருடன் நிற்பதிலும் சங்கடம் இல்லை. அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்பதிலும் மகிழ்ச்சி தான். ஆனால் நானும், விஜயும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து இங்கே அரசியல் சூதாட்டம் ஆட விரும்புபவர்கள் தமிழக அரசியல் களத்தில் களேபரத்தை உருவாக்குவார்கள். குழப்பத்தை உண்டாக்குவார்கள். அதை நான் விரும்பவில்லை. இதனை நான் ஏற்கனவே கூறி விட்டேன். எனக்கு எந்த அழுத்தழும் கிடையாது. சுதந்திரமாக எடுத்த முடிவு. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த முடிவு. தமிழக அரசியலின் எதிர்காலம் கருதி எடுத்த முடிவு. வி.சி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நலன் கருதி எடுத்த முடிவு. என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் இல்லை என்றார்.