என் மலர்
தமிழ்நாடு

வரும் 25-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

- மார்ச் 15-ந்தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
- அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் மார்ச் 14-ந்தேதி 2025-2026ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதனை தொடர்ந்து மார்ச் 15-ந்தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதி நிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்று சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோருடன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25-ந்தேதி நண்பகல் 12 மணி அளவில் கூடுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.