என் மலர்
தமிழ்நாடு
'தொடுங்கப்பா' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?- தமிழக அரசு கொடுத்த விளக்கம்
- உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 கோடியையும் தாண்டிவிட்டது.
- தமிழக பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ வட இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை:
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் செல்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன்களின் மூலமாக சமூக வலைதளங்களில் பலரும் உலா வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 கோடியையும் தாண்டிவிட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதனால் ஒரு நாட்டில் வைரலாகும் சமூக வலைதள பதிவுகளோ, வீடியோவோ கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுபோலத்தான் தமிழக பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ வட இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வட இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தமிழக பாதிரியார் பிரார்த்தனை செய்வது போன்ற வீடியோவையும், அதில், 'பிரதமர் மோடி, மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை இயேசு கிறிஸ்து கொல்ல வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டு அதில் தேவாலயம் கட்டுவதற்கு வலிமை தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்' என்று குறிப்பிட்டும் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'பிரார்த்தனை செய்யும் அந்த வீடியோவில் பாதிரியார் 'தொடுங்கப்பா' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார். 'தொடுங்கப்பா' என்ற வார்த்தை தொடுதலை குறிக்கும்.
மேலும் இது ஆசீர்வாதம் என்று பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, உத்தரபிரதேச முதல்-மந்திரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு, அவர்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். 'தொடுங்கப்பா' என்ற வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு சூழல்களில் தவறாக பரவுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.