என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9073797-kanyakumari.webp)
சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.
அதன்படி விடுமுறை நாளான இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். காலை 8 மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்கும் என்ற நிலையில் அதிகாலையிலேயே படகுதுறையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி கூண்டு பாலம்வழியாக நடந்து சென்று, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.
மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை திடீரென அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.