search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் விடுமுறை முடிந்தும் கொடைக்கானலில் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்
    X

    பொங்கல் விடுமுறை முடிந்தும் கொடைக்கானலில் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்

    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருவார்கள். தமிழகம் முழுதும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பகலில் மேகமூட்டமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலையும் குளிர்ந்த சீதோஷ்ணத்தையும் ரசித்தபடி வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.

    பழனி சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் பழனி அடிவாரப் பகுதியில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசல் குறைந்துள்ளது. எனவே இதே நடைமுறையை தொடர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பஸ்கள் அனுமதிக்கப்படாத நிலையிலும் வாகன நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது ஓட்டல் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதும், கூடுதல் விலை வசூலிக்கப்படுவதும் நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா வரும் பலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு செல்கின்றனர். எனவே இதனையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×