என் மலர்
தமிழ்நாடு
தேனியில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம்- நாளை மறுநாள் முதல் அமல்
- ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் திரும்ப கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
- பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேனி:
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகில் தாமரைக்குளம் கண்மாய் வரை ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்து போனதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய பஸ் நிலையத்தில் இந்த வாய்க்கால் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் திரும்பி கொட்டக்குடி ஆற்றுக்கே செல்கிறது.
இதையடுத்து பழைய பஸ் நிலையம் அருகில் கம்பம் சாலையில் ராஜவாய்க்கால் மேல் உள்ள பழைய தரைப்பாலத்தை இடித்து அகற்றி, ராஜவாய்க்காலை தூர்வாரிவிட்டு புதிதாக பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதால் பழைய பஸ் நிலையம் பகுதியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் திரும்ப கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்வதற்காக தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் ஒருவழிப்பாதையாக பழைய பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியேற வேண்டும். கம்பம் மற்றும் போடியில் இருந்து தேனி நகருக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்ள வழித்தடத்திலேயே வந்து பழைய பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் நேரு சிலை சிக்னல் வழியாக மதுரை சாலைக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து வழித்தட மாற்றம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.