search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? டி.டி.வி. தினகரன்
    X

    போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? டி.டி.வி. தினகரன்

    • கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது.
    • உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் புகையிலை, போதை சாக்லெட் உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய திமுக அரசால், ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கூட தடுக்க முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

    தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறையும், காவல்துறையும், அத்துடன் அதனை கடந்து விடுவதும் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுமே கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது.

    பள்ளிக்குழந்தைகள் தன்னை அப்பா… அப்பா… என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக பெருமிதமடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்குதடையின்றி நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் ? என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    எனவே, மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

    Next Story
    ×