என் மலர்
தமிழ்நாடு
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்
- தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.
- மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விவசாயிகள் பாதிப்பு குறித்து விளக்கி கூறினர். இதனால் மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்தது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமான இந்த பகுதிகள் கழுகுமலை, கழிஞ்சமலை, நாட்டார்மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை ஆகிய 7 சிறிய குன்றுகளை கொண்டுள்ளன.
அதேபோல் 2,200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழ் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால கற்படுக்கைகள், குடைவரைக் கோவில்கள் என தனித்துவமான அடையாளங்களும் அரிட்டாபட்டியில் அமைந்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணை நீரால் இப்பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் ஒரு போக பாசன விவசாயமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியை மையமாக கொண்டு அந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கனிமவளம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது.
அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்குத் தெரு, முத்து வேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நம்பவர் 7-ந்தேதி வெளியிட்டது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 7-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
டிசம்பர் 9-ந்தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.
இருந்தபோதிலும் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
மேலூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீரழிக்க இருந்த டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்திய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை மேலூர் விவசாயிகளும், பொதுமக்களும் நேரில் சந்தித்து தங்களது இதயபூர்வமான நன்றியை தெரிவித்தனர். pic.twitter.com/GIQlyV3Snn
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 28, 2025
இந்த நிலையில் டெல்லி சென்ற போராட்டக்குழுவினர், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விளக்கி கூறினர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அத்துடன்
இன்று அரிட்டாபட்டியில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர்.
இந்த நிலையில் மேலூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை கிரீன்ஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.