search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    த.வெ.க.வில் மேலும் 19 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் விஜய்- பட்டியல் வெளியீடு
    X

    த.வெ.க.வில் மேலும் 19 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் விஜய்- பட்டியல் வெளியீடு

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார்.
    • நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 121 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. சிறிய தொகுதி என்றால் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய தொகுதிகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார். அவர்களை வரவழைத்து மாவட்ட செயலாளர்களாக நியமித்ததற்கான சான்றிதழை விஜய் நேரில் வழங்கியதுடன், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். இதையடுத்து மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது. இதற்காக மாவட்ட செயலாளர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தயாரித்து வந்தார். அந்த மாவட்ட செயலாளர்களின் விவரங்கள், கட்சியில் அவர் எப்படி செயல்பட்டு வருகிறார், மாவட்டத்தில் அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்தார்.

    பின்னர் மாவட்ட செயலாளர்களின் பட்டியலை கட்சி தலைவர் விஜய்யிடம் வழங்கினார். பின்னர் விஜய்யும், புஸ்சி ஆனந்தும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் பின்னணியை மீண்டும் சரி பார்த்தனர். எவ்வளவு நாள் தங்களுடன் உள்ளனர். மாவட்டத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி பரிசீலனை செய்தனர்.

    இதையடுத்து அவர்களில் 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன், அவர்களை தனித்தனியே நேரில் அழைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பதவிக்கான நியமன சான்றிதழை அவர்களிடம் வழங்கி கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    'நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க செல்வந்தர்கள் பலரும் முயன்றனர். ஆனால் உங்களின் உழைப்பை நம்பி உங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன்.

    எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக இந்த பதவியை பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பண பேரம் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் பெரிய தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். சிறிய தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சபரிநாதன், சேப்பாக்கம் தொகுதிக்கு திலீப்குமார், பல்லாவரம் தொகுதிக்கு குமார், தாம்பரம் தொகுதிக்கு சரத்குமார், திரு.வி.க.நகர் தொகுதிக்கு பல்லவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேலு, மாதவரம் தொகுதிக்கு எம்.எல்.பிரபு ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பல்லவி பெண் மாவட்ட செயலாளர் ஆவார். பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் மன்மதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளுக்கும் இன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட உள்ளனர்.

    Next Story
    ×