என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவு- உதயநிதி ஸ்டாலின்

- பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சமீபத்தில், தமிழக அரசு இரு முக்கிய மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய குற்றவியல் மாநாடு நடந்தது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
2020-ம் ஆண்டில் 3.71 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2021-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 4.28 லட்சமாகவும், 2022-ல் 4.45 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 2023, 2024-ம் ஆண்டுக்கான இந்த புள்ளிவிவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணம் அவர்களுக்கு தெரியும். வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது.
தமிழக அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சமீபத்தில், தமிழக அரசு இரு முக்கிய மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு இந்த மாநாட்டில் கொண்டுவரப்படும் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.