என் மலர்
தமிழ்நாடு

திராவிட கொள்கைகளை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

- நாம் பேச்சாளர்களை உருவாக்குவதை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
- உங்கள் மூலம் இளைய சமுதாயத்திற்கு திராவிடத்தின் சிறப்புகளையும் இந்த அரசின் செயல்பாடுகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி சார்பில் இளம் பேச்சாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று தொடங்கியது. முகாமை துணை முதலமைச்சரும், இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 180 இளம் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திலும் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 17 ஆயிரம் பேருக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு இந்த 2 நாள் பயிற்சி மிகவும் அவசியம். நாம் பேச்சாளர்களை உருவாக்குவதை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
தந்தை பெரியார் காலத்தில் தற்போதுள்ள தொழில் நுட்பங்கள் கிடையாது. ஆனாலும் அவர் திராவிட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றார். நவீன காலத்தில் யூடியூப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உள்ளன.
இவற்றின் மூலம் திராவிட கொள்கைகளையும், அரசின் திட்டங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு அரசால் செய்யப்படுகின்ற பணிகளை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் வகையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தின் வரலாறு, கொள்கைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் மூலம் இளைய சமுதாயத்திற்கு திராவிடத்தின் சிறப்புகளையும் இந்த அரசின் செயல்பாடுகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
2 மணி நேரத்திற்கு மேலாக உதயநிதி ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு பேச்சாளர்களின் பேச்சுகளை கேட்டார். தி.மு.க.வில் உள்ள அனுபவமிக்க பேச்சாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட பேச்சாளர்கள், மேடை பேச்சு குறித்து கருத்துக்களை கூறினார்கள். பயிற்சி முகாமில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.