search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை- விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
    X

    சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை- விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

    • விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 580 கோடி பெண்கள் இலவச பயணம் சென்றுள்ளனர்.
    • தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடக்கவில்லை. மக்களாட்சி தான் நடக்கிறது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 247 ஊராட்சிக்கு 345 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

    ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, வேளாண் துறை உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 4,844 பயனாளிகளுக்கு ரூ.128.92 கோடி மதிப்பபிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசியதாவது:

    தமிழகத்தில் 31-வது நிகழ்ச்சியாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை குறித்து மக்களிடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தான் காரணம்.

    சர்வதேச சேது ஒலிம்பிக் போட்டி நடத்தியதை பார்த்து வெளிநாட்டினரும் பாராட்டு தெரிவித்தனர்.

    விளையாட்டு வீரர்கள் நித்யஸ்ரீ, யாசிப் ஆகியோர் இங்கு வந்துள்ளனர். அவர்கள் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். சாதிக்க எதுவுமே தடையில்லை.

    தமிழகத்தில் தாய்மார்களுக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மகளிருக்கான திட்டங்களை ஒவ்வொரு நாளும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் மகளிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் அரசு உங்களை மேலும் உயர்த்தும். மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. யார்? யாருக்கு என்ன தேவை என்பதை பார்த்து, பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.

    திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக மக்களிடம் மகிழ்ச்சியை பார்க்கிறோம். மகளிர் பொருளாதார மேம்பாடு அடைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 580 கோடி பெண்கள் இலவச பயணம் சென்றுள்ளனர்.

    இதன் மூலம் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வரை மிச்சமாகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1.16 லட்சம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது மகளிர்களின் உழைப்பின் மீது நம்பிக்கையால் அவர்களுக்கு தொடர்ந்து கடன் உதவி வழங்கப்படுகிறது.

    இங்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலேயே சிறந்த வீரர்களாக உருவாக வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இங்கு விளையாட்டு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவருக்கும் என்னுடைய அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை. தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடக்கவில்லை. மக்களாட்சி தான் நடக்கிறது என்றார்.

    Next Story
    ×