என் மலர்
தமிழ்நாடு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி
- பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஞானசேகரன்.
- ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை வேலை என்பது ஜனநாயகத்தில் தவறுகளை கண்டிப்பது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் இரவில் பேசிக்கொண்டிருந்த போது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி விட்டு மாணவி பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.
நாடு முழுவதும் அதிர் வலைகளை உருவாக்கிய இந்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் (37) என்ற பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மற்றொரு 'சாரும்' சம்பந்தப்பட்டு இருப்பதாக மாணவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சார் என்று குறிப்பிட்ட அந்த நபர் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று பா.ஜ.க. தொடர்ந்து போராடி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழகம் மாற வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனம் உடைந்து போன அந்த மாணவியை அவமானப்படுத்த எப்.ஐ.ஆரை கசியவிட்டு செய்யக்கூடாத அனைத்தையும் தி.மு.க. அரசு செய்து உள்ளது.
ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஞானசேகரன். அவர் அந்த மாணவியை வீடியோ படம் எடுத்து மிரட்டி இருக்கிறார். இவ்வளவு கொடூரமான குற்றவாளியை போலீசார் கண்காணிக்காமல் இருந்தது ஏன்?
ஆளும் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர்களுடன் வைத்திருந்த தொடர்பு, கட்சி செல்வாக்கு ஆகியவற்றால் போலீஸ் கண்டு கொள்ளவில்லை. அவருடைய குற்றப்பின்னணி, அமைச்சர்களுடன் உள்ள தொடர்புகள் பற்றி புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டும் அவரை குற்றவாளி என்று யாரும் பேசுவதில்லை. அதற்கு மாறாக பாதிக்கப்பட்ட மாணவி தான் தவறு செய்தவர் என்ற கதையை கட்டமைக்க தி.மு.க.வினர் முயற்சிக்கிறார்கள்.
குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள். 2014-15-ம் ஆண்டிலும் இவர் மீது இதே போன்ற ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது. அப்படி இருந்தும் அவரை பாதுகாக்க முயல்வது வெட்க கேடானது.
கொடூர குற்றவாளியிடம் இருந்து உயிர் பிழைத்த அந்த மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்ததால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை வேலை என்பது ஜனநாயகத்தில் தவறுகளை கண்டிப்பது,எதிர்ப்பு தெரிவிப்பது என்று நான் எப்போதும் நம்புகிறேன். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் கருத்துக்கள் தி.மு.க.வால் திரிக்கப்பட்டுஉள்ளது.
2026 தேர்தலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி என்ற இமேஜை பாதுகாப்பதில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மவுனமாக இருப்பது ஏன்?
ஜனநாயகம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசும் ராகுல் காந்தி தமிழகம் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை பார்க்காமல் மவுனம் காப்பது ஏன்?
இந்த விவகாரத்தில் நீதிக்காக போராடுபவர்களை அடக்கி ஒடுக்குவதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. மதுரையில் நடந்த போராட்டத்தில் குஷ்பு மற்றும் பா.ஜ.க. மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மற்றும் மகளிர் அணியினரை கைது செய்து ஆட்டுக் கொட்டகையில் அடைத்து கொடூர ஆட்சியின் குரூர முகத்தை காட்டி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.