search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோட்டார் சைக்கிள் விபத்தில் தலை துண்டாகி என்ஜினீயர் பலி- நண்பரும் உயிர் இழந்த சோகம்
    X

    மோட்டார் சைக்கிள் விபத்தில் தலை துண்டாகி என்ஜினீயர் பலி- நண்பரும் உயிர் இழந்த சோகம்

    • பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பம்மல், செல்வ விநாயகர் கோவில் தெரு, சங்கர் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் விஷ்ணு பாண்டியன். இவரது மகன் கோகுல் (வயது 24). கந்தன் சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு (24) என்பவரும் என்ஜினீயராக பணியாற்றினார். இவர் மேற்கு மாம்பலம் கிருஷ்ணன் குட்டி தெருவில் தங்கி இருந்தார்.

    நேற்று இரவு நண்பர்களான கோகுலும், விஷ்ணுவும் ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், 6-வது தெருவில் வசித்து வரும் மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே மேலும் சில நண்பர்கள் வந்து இருந்தனர். அங்கு மது விருந்து நடந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மேலும் மதுபாட்டில் வாங்குவதற்காக பள்ளிக்கரணை 200 அடி சாலையில் உள்ள மதுபாருக்கு உயர்ரக கே.டி.எம். மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    மதுபாட்டில் வாங்கி கொண்டு திரும்பி செல்லும் போது வேளச்சேரி பிரதான சாலையில் ஆதிபுரீருஸ்வரர் சிவன் கோவில் எதிரே வந்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் நண்பர்கள் கோகுலும், விஷ்ணுவும் மோட்டார் சைக்கிளோடு பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் கோகுலின் தலை அதிவேகமாக தடுப்பு சுவரில் மோதியதில் தலை துண்டாகி பலியானார். இதேபோல் தூக்கி வீசப்பட்ட விஷ்ணுவும் நெஞ்சில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான 2 என்ஜினீயர்களும் மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×