என் மலர்
தமிழ்நாடு

த.வெ.க. பொதுக்குழு கூட்டத்துக்கு 2500 பேருக்கு விஜய் அழைப்பு

- பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது.
- கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.
பொதுக்குழு கூட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் கட்சி தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்ட அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 15 பேர் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
ஏற்கனவே 114 மாவட்ட செயலாளர்களை 6 கட்டங்களாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
விரைவில் மீதி உள்ள மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தமிழக பிரதான அரசியல் கட்சிகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, அடுத்தக் கட்ட நடவடிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்சி தலைவர் விஜய் பேச இருக்கிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வரும் விஜய் அறிவிப்புகள் தொண்டர்களிடையே மேலும் உற்சாகத்தை அதிகரித்து வருகிறது.