என் மலர்
தமிழ்நாடு
அமைந்தகரை பகுதியில் விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றுடன் இணைக்கப்படுகிறது- மாநகராட்சி திட்டம்
- விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பல பாலங்கள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன
- வெள்ள அபாயத்தை தடுக்க இந்த பாலங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னை:
சென்னையில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக விருகம்பாக்கம் கால்வாயை, அமைந்தகரைக்கு அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
விருகம்பாக்கம் கால்வாய் நெற்குன்றம் அருகே புவனேசுவரி நகரில் இருந்து உற்பத்தியாகி சின்மயாநகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ. காலனி, சூளைமேடு, ஆசாத் நகர், திருவள்ளுவர் புரம் வழியாக மொத்தம் 6.36 கி.மீ தொலைவுக்கு செல்கிறது. இது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை அருகே கூவம் ஆற்றில் இணைகிறது. விருகம்பாக்கம் கால்வாயில் மழை காலங்களில் அதிகபட்சமாக 2.50 மீட்டர் உயரம் வரை தண்ணீர் செல்வதற்கான வசதி உள்ளது. அதாவது வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீரை விருகம்பாக்கம் கால்வாய் வழியாக அனுப்ப முடியும். தற்போது விருகம்பாக்கம் கால்வாயில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
மேலும் இதன் உள்கட்டமைப்பும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாயில் தண்ணீர் சரியாக செல்ல முடிவதில்லை. தற்போது 800 கனஅடி தண்ணீரே செல்லும் நிலை உள்ளது.
ஃபெஞ்ஜல் புயல் மழை காரணமாக சென்னையில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால், விருகம்பாக்கம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, விருகம்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பல பாலங்கள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன. இந்த கால்வாயில் மொத்தம் 24 பாலங்கள் உள்ளன. இதில் 10 பாலங்கள் முக்கியமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ள அபாயத்தை தடுக்க இந்த பாலங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து இந்த கால் வாயை சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக நீர்வளத்துறையிடம் இருந்து இந்த கால்வாயை சென்னை மாநகராட்சி கையகப்படுத்த உள்ளது. இதில் குறைவான உயரமுள்ள 11 பாலங்கள் இடிக்கப்பட உள்ளன.
சாய்நகர், 100 அடி சாலை, காமராஜர் நகர், திருவள்ளுவர் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்கள் இடிக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்படும் பாலங்கள் வழியாக குறைந்தபட்சம் 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு இந்த பாலங்கள் வலுவாக இருக்கும். நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, நெல்சன் மாணிக்கம் சாலை போன்ற வெள்ளம் அதிகம் உள்ள இடங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
மேலும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் விருகம்பாக்கம் கால்வாய், கூவம் ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது. அமைந்தகரை பகுதியில் இந்த இணைப்பு அமைய உள்ளது. இதற்காக 2.5 கி.மீ தூரத்துக்கு வடிகால் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் விருகம்பாக்கம் கால்வாயில் வெள்ளத்தின் பாதிப்பு தடுக்கப்படும்.