என் மலர்
தமிழ்நாடு
அண்ணா பல்கலை. வளாகத்தில் 23-ந்தேதி இரவு நடந்தது என்ன? - மாணவியிடம் விசாரணை: அறிக்கை விரைவில் தாக்கல்
- மாணவிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- பதில்கள் அனைத்தையுமே மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மாணவியிடம் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை போலீ சார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 2-வது நபர் யார்? என்பது பற்றி உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து நேற்று அதிரடி விசாரணையில் இறங்கின. மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யான பிரவீன் தீட்சித் ஆகியோர் நேற்று காலை 9 மணி அளவில் தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்ற இருவரும் அங்கிருந்தே தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தற்போது துணை வேந்தர் இல்லாத நிலையில் நிர்வாகத்தை கவனிப்பதற்காக தனிக்கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களே ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள்.
மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவரும் இந்த கமிட்டியில் இருப்பவர்களை அழைத்து பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடத்தை சென்று பார்வையிட்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இரவு நேரத்தில் இந்த பகுதியில் போதிய வெளிச்சம் இருக்குமா? மாணவிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
27-ந்தேதி அன்று பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை கேட்டு அது தொடர்பான விளக்கத்தையும் கேட்டு பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர்களை அங்கு பணியாற்றும் மற்ற பணியாளர்கள் என அனைவருமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தையுமே மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.
இதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோர், தோழிகள், மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரிடமும் மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினார்கள். மாணவியிடம் தனியாக ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள், இதன் பிறகு இந்த வழக்கில் போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையையும் படித்து பார்த்தனர். அப்போது மாணவி தங்களிடம் அளித்த தகவல்களும், போலீசாரிடம் அளித்த தகவல்களும் ஒன்றாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொண்டனர். இதன் பிறகு மாலையில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை நேரில் அழைத்து பல்வேறு தகவல்களை கேட்டனர்.
உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார், சமூக நலத்துறை செயலாளர் வளர்மதி, டிஜி.பி. சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மகளிர் ஆணைய உறுப்பினர்களை நேரில் சந்தித்தனர்.
சுமார் 1½ மணிநேரம் நடந்த இந்த சந்திப்பின் போது போலீஸ் கமிஷனர் அருண் பாலியல் வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் விளக்கி கூறியுள்ளார்.
இந்த விசாரணையை முடித்துக் கொண்டு ஆணைய உறுப்பினர்கள் இருவரும் இன்று டெல்லி சென்றனர். மத்திய அரசிடம் அவர்கள் தங்களது அறிக்கையை தயாரித்து விரைவில் அளிக்கிறார்கள்.