search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026 சட்டமன்ற தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி உருவாக ரஜினிகாந்த் குரலாக ஒலிப்பாரா?
    X

    2026 சட்டமன்ற தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி உருவாக ரஜினிகாந்த் குரலாக ஒலிப்பாரா?

    • நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
    • ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கடந்த காலங்களில் ஜெயலலிதாவோடு முரண்பட்ட ரஜினிகாந்த் தற்போது ஜெயலலிதாவை பாராட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரஜினிகாந்த் - ஜெயலலிதா முரண்பாடுகள்:

    1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது போயஸ் கார்டனில் ரஜினியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம், அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வெளியான அண்ணாமலை திரைப்படத்தில் ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் வசனம் இடம் பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அண்ணாமலை படத்திற்கு பின்பு 'நாளைய முதல்வரே' ரஜினிக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர். இது ஜெயலலிதாவிற்கு கடும் கோவத்தை உருவாக்கியது.

    1995 இல் இயக்குநர் மணிரத்னத்தின் 'பம்பாய்' படம் வெளியான சமயத்தில் அவருடைய வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், "தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது'' என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து உடனடியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 1996 இல் நடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி ஆட்சியை பிடித்தார்.

    திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வன் படத்தின் கதையை ரஜினிகாந்திடம் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் ஏனோ அந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். ஒருவேளை திமுகவுக்கு பதில் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடித்திருப்பாரோ என்னவோ?

    ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக அரசியலுக்கு விரைவில் வருவேன் என்று நீண்ட நாட்களாக கூறி வந்த ரஜினிகாந்த் ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பிறகு இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.

    அதிமுக - பாஜக கூட்டணி?

    பாஜகவின் 'குரலாக' ரஜினிகாந்த் பேசி வருகிறார் என்ற விமர்சனம் நீண்ட நாட்களாக இருந்த நிலையில் திடீரென தற்போது ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்துவதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் நோக்கம் உள்ளதா என்று கேள்வி எழுகிறது,

    ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு அதிமுக பல துண்டுகளாக பிளவுபட்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஓர் அணியிலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோர் மற்றொரு அணியிலும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக கட்சி சின்னம் தொடர்பான பிரச்சனையும் தேர்தல் ஆணையத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.

    பாஜக கூட்டணிக்கு வரமாட்டேன் என்று எடப்பாடி ஒருபக்கம் அடம் பிடிக்க இன்னொரு பக்கம் அதிமுக ஒன்றிணைந்து 'பாஜக' கூட்டணியில் சேர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக தலைவர்கள் தற்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகின்றனர். இது அதிமுகவை கூட்டணியில் இழுக்கவும் அல்லது அதிமுக ஓட்டுக்களை தன்பக்கம் இழுக்கவும் பயன்படும் என்று பாஜக நினைக்கிறது.

    ஜெயலலிதாவை ரஜினிகாந்த் புகழ்வதன் காரணம் என்ன?

    ஜெயலலிதாவோடு முரண்பட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பின்னர் பின்வாங்கிய ரஜினிகாந்த், இப்போது ஏன் திடீரென ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்?

    தற்போது வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், ஜெயலலிதா நினைவு நாளில் அவர் வசித்த வேதா நிலையத்திற்கே ரஜினிகாந்த் சென்று திரும்பியது 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி உருவாக ரஜினிகாந்த் குரலாக ஒலிப்பாரோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×