என் மலர்
தமிழ்நாடு

த.வெ.க. தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் உத்தரவு

- 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
- 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதவிர த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.