என் மலர்
தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட அழகர்சாமி.
வீட்டுவாசலில் இளைஞர் கொலை- மதுபோதை தகராறில் 3 பேர் வெறிச்செயல்

- வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தனர். 19 வயதான மகன் அழகர்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கட்டிட வேலை உட்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது கதவை திறந்து தம்மை அழைத்தது யார் என்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அழகர்சாமியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.
இதில் நிலைகுலைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.அர்விந்த் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் அழகர்சாமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வேலைக்கு அழைப்பது போல் அழைத்து வீட்டின் வாசலிலேயே வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.