என் மலர்
செய்திகள்
X
ஜியோவின் மலிவு விலை சலுகைகள் மேலும் 18 மாதங்களுக்கு வழங்கப்படலாம்
Byமாலை மலர்4 April 2017 12:35 PM IST (Updated: 4 April 2017 12:35 PM IST)
ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டதை தொடர்ந்து கட்டண சேவைகளும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜியோ சேவைகள் 18 மாதங்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மார்ச் 31-ந்தேதி வரை அதன் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் ஜியோ கட்டண சேவைகள் பிரைம் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், ஜியோ பிரைம் திட்டத்தில் சேர கடைசி நாள் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோ சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலை சேவைகள் மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் FY18 வாக்கில் சுமார் 83 மில்லியன் வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச வருவாய் (ARPU) மாதம் ரூ.246 வரை இருக்கலாம் என டெலிகாம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்சமயம் வரை 60% வாடிக்கையாளர்கள் ஜியோ 4ஜி கட்டண சேவைகளை பயன்படுத்த துவங்கியுள்ளதை தொடர்ந்து வல்லுநர்களின் எதிர்பார்ப்புகள் வெளியாகியுள்ளது.
மேலும் FY21 மற்றும் FY22 வாக்கில் முகேஷ் அம்பானியின் ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் 200 மில்லியன் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இருப்பர் என ஜியோ சார்பில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை FY23 வாக்கில் 211 மில்லியன் வாடிக்கையாளர்கள் வரை அதிகரிக்கும் என்றும் இவர்களிடம் இருந்து மாதம் 245-250 வரையிலான குறைந்த பட்ச வருவாய் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து ஜியோ வாடிக்கையாளர்களை அதிகரிக்க அந்நிறுவனம் மலிவு விலையில் சலுகைகளை வழங்கும் என்றும் அடுத்த 12 - 18 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இது தொடரும் என்றும் டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X