search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.58½ கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்
    X

    முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.58½ கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்

    • கடந்த 1.4.2011 முதல் 31.3.2021 வரையில் காமராஜ் தமிழக அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
    • 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு மே மாதம் வரையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பையும் இவர் வகித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் காமராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மூத்த மகனான டாக்டர் இனியன் 2-வது குற்றவாளியாகவும், இளைய மகன் இன்பன் 3-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சந்திரசேகரன், மன்னார்குடியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் அடுத்தடுத்து குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    காமராஜ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை நன்னிலம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா சோதிரியாம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். விவசாயம் மூலமே வருவாய் ஈட்டி வந்த காமராஜுக்கு முன்னாள் எம்.பி. என்ற முறையில் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. கடந்த 1.4.2011 முதல் 31.3.2021 வரையில் காமராஜ் தமிழக அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

    2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு மே மாதம் வரையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பையும் இவர் வகித்தார்.

    பொது ஊழியராக இருந்த அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சொத்துக்கள், பங்குகள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். பணம் சம்பாதிக்கும் வழிகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டு தன்னை காமராஜ் வளப்படுத்திக் கொண்டுள்ளார்.

    1.4.2015 அன்றைய கணக்கீட்டின்படி முன்னாள் அமைச்சரான காமராஜின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ஆக இருந்தது. கட்டிடங்கள், விவசாய நிலங்கள், தங்க நகைகள், மோட்டார் வாகனம், வைப்பு தொகை, வங்கி இருப்பு போன்ற வகைகளில் இந்த சொத்துக்கள் அடங்கி இருந்தது.

    குற்றம் சாட்டப்பட்ட காமராஜ் உள்ளிட்ட 6 பேரும் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை சட்டப்பூர்வமாக்குவதற்காக குற்றவியல் சதியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்காக "என்.ஏ.ஆர்.சி. ஓட்டல் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தனர். இந்த நிறுவனம் தஞ்சை பிரதான மேற்கு தெரு என்ற முகவரியுடன் இணைக்கப்பட்டிருந்ததாகும். இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.25 லட்சம் ஆகும்.

    குற்றச்சதியின்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உதயகுமார் ரூ.1 கோடியே 10 லட்சத்தை ஓட்டல் வங்கி கணக்குக்கு பங்குகளை வாங்குவதற்காக மாற்றி இருக்கிறார். இதை தொடர்ந்து ஓட்டலின் முழு பங்கு வாங்கப்பட்டுள்ளது. ஓட்டலின் பெயரிலான சொத்துக்களை முறைகேடாக வாங்குவதற்கு முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் பெரிதும் உதவியுள்ளனர்.

    காமராஜின் மகன்களான இனியன், இன்பன் ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாக உள்ள "ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தின் பெயரில் பல்வேறு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர் 2019-ம் ஆண்டில் காமராஜ் வாசுதேவ பெருமாள் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் பெயரில் மருத்துவமனையை கட்ட தொடங்கி உள்ளனர்.

    ஓட்டலை கையகப்படுத்தியதின் மூலம் காமராஜ் தனது ஆஸ்பத்திரிகளுக்காக 47366 சதுர அடி இடத்தையும் பெற்றிருக்கிறார். கிரிமினல் சதி திட்டத்தின்படி ஓட்டல்கள் பெயரில் ரூ.27 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்த 350 மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் கட்டியுள்ள ஆஸ்பத்திரியின் மதிப்பு ரூ.25 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரத்து 176 ஆகும்.

    லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட காலத்துக்கு முன்னாள் காமராஜ் மற்றும் அவரது மனைவி, மகன்கள் பெயரிலான சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 மட்டுமே ஆகும். இதன் பின்னர் 31.8.2021 அன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் 3 பேரின் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    விவசாய நிலங்கள், கட்டிடங்கள், குடோன்கள், மோட்டார் வாகனங்கள், நிலையான வைப்பு தொகைகள் போன்றவற்றின் மதிப்பும் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள், காப்பீடு தொகைகள், முதலீடுகள், வங்கி இருப்பு போன்றவையும் அதிகரித்துள்ளன.

    இதன்படி 3 பேரின் பெயரிலும் தற்போது ரூ. 58 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 749 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இது அவர்களது வருமானத்துக்கு மீறிய வகையிலான சொத்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் அடிப்படையிலேயே காமராஜ் மற்றும் அவரது மகன்கள் மீதும் சொத்துக்களை குவிப்பதற்கு உடந்தையாக இருந்த 3 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×