search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் மாயமான விமானம்- விபத்தில் சிக்கி  10 பேர் பலி
    X

    அமெரிக்காவில் மாயமான விமானம்- விபத்தில் சிக்கி 10 பேர் பலி

    • கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது.
    • கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர்.

    பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.

    நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் சென்றபோது கடும் பனிப்பொழிவு நிலவியது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    இதில் ஹெலிகாப்டர்கள், ஹெச்-130 ஹெர்குலஸ் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

    நோம் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கடலோர காவல்படை தெரிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.

    இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அந்த விமானம் அலாஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் பயணித்த 10 பேரும் பலியாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

    இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் மைக் சலெர்னோ கூறும் போது, விமானத்தின் கடைசி சிக்னல் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அறியப்பட்ட இடத்தைத் தேடிய போது விமானத்தின் நொறுங்கிய பாகங்களை கண்டுபிடித்தனர் என்றார்.

    கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது. கடந்த 29-ந்தேதி வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம்-ராணுவ ஹெலிகாப்டர் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். 31-ந்தேதி பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்த தில் 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×