என் மலர்
செய்திகள்
X
சோமாலியா உணவகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு
Byமாலை மலர்29 Oct 2017 5:39 PM IST (Updated: 29 Oct 2017 5:39 PM IST)
சோமாலியா நாட்டின் மொகடிஷு நகரில் உள்ள உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொகடிஷு:
சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய
சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது. உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடி தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.
இதற்கிடையே, சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள ஒரு பிரபல உணவகம் மீது நேற்று மாலை அல் ஷபாப் தீவிரவாதிகள் கார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர், மேலும் பல தீவிரவாதிகள்
அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த மோதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், அல் ஷபாப் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 போலீசாரும், 3 குழந்தைகளும் அடங்குவர். உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய
தீவிரவாதிகளை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அல் ஷபாப் தீவிரவாத அமைப்பினர் கூறுகையில், உணவகம் மீது தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் எங்கள் அமைப்பை சேர்ந்த 3 பேரும் அடங்குவர் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே மொகடிஷு நகரில் கடந்த 14-ம் தேதி நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 358 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X