search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு
    X

    தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

    தாய்லாந்தில் மலைக்குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். #ThailandCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.

    அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பவில்லை. வெள்ளம் காரணமாக அவர்கள் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரமாக களமிறங்கியது.

    குகைக்குள் உடனடியாக செல்ல முடியாததால், குகையில் 25-க்கும் மேற்பட்ட பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது. பின்னர் குகையில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 1000 ராணுவ வீரர்களுடன், வெளிநாடுகளில் இருந்தும் நாடுகளில் இருந்து குகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

    9 நாட்களுக்குப் பிறகு குகைக்குள் கால்பந்து குழுவினர் சிக்கியிருக்கும் பகுதியை நேற்று நெருங்கினர். அதன்பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நீர்மூழ்கி வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று மற்றொரு முனைக்கு கரையேறியபோது அங்கு கால்பந்து குழுவினர் இருந்தது தெரியவந்தது.



    இருட்டாக இருந்ததால் டார்ச் லைட் அடித்து, அவர்களிடம் நீர்மூழ்கி வீரர்கள் பேசியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குகைக்குள் இருக்கும் நபர்களிடம் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று நீர்மூழ்கி வீரர்கள் கேட்க, 13 பேர் இருப்பதாக பதில் வருகிறது.  இதனால் மகிழ்ச்சி அடைந்த நீர்மூழ்கி வீரர்கள், நீங்கள் மிகவும் தைரியசாலிகள் என்று கூறி அவர்களை தேற்றுகின்றனர்.

    மேலும், அனைவரும் நீந்திதான் செல்ல வேண்டும் என்பதால் முதலில் நாங்கள் இப்போது இங்கிருந்து செல்கிறோம். அதன்பின்னர் நாளை மேலும் பல வீரர்களுடன் வந்து உங்களை அழைத்துச் செல்கிறோம் என நீர்மூழ்கி வீரர்கள் கூறுகின்றனர். அப்போது தாங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக சிறுவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் நிலைமையை விளக்கிவிட்டு நீர்மூழ்கி வீரர்கள் அங்கிருந்து புறப்படுகின்றனர்.

    9 நாட்களுக்குப் பிறகு அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல், குகைக்கு வெளியே திரண்டிருந்த உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சிறுவர்கள் இருக்கும் இடம் தெரியவந்ததையடுத்து, மேலும் பலர் குகைக்குள் சென்று அவர்களை இன்று அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  #ThailandCaveRescue




    Next Story
    ×