search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வுகான் வைராலஜி ஆய்வகம்
    X
    வுகான் வைராலஜி ஆய்வகம்

    கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு

    கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து விசாரணை நடத்துவதற்காக அமெரிக்க அனுப்பும் விசாரணைக் குழுவை அனுமதிக்க சீனா மறுத்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் வுகான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் வெளிப்பட்டது. வுகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் வெளிப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. அதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது அடிக்கடி ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

    கொரோனாவை ‘சீனா வைரஸ்’ என்று வர்ணித்த அவர், கொரோனா குறித்து சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். அத்துடன், கொரோனா வைரஸ் எப்படி உருவானது? என்பது குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அமெரிக்கா அனுப்ப விரும்புவதாக டிரம்ப் கூறினார். 

    வுகான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொடிய வைரஸ் வெளிப்பட்டதா? என்பது குறித்து அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வருகிறது. 

    இந்நிலையில், விசாரணைக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. 

    இதுபற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி. இது உலகில் எந்த நேரத்திலும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மற்ற நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சீனா குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட நாடு. இந்த வைரசை நாங்கள் உருவாக்கவில்லை. 

    இந்த வைரஸ் வெளிப்பட்டதில் இருந்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு மிகவும் முழுமையான மற்றும் வலுவான நடவடிக்கைகளுடன் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறது. வைரசைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சிகள், சர்வதேச சமூகம் தங்கள் நாடுகளில் வைரசை கட்டுப்படுத்துவதற்கான மதிப்புமிக்க அனுபவத்தை வழங்கியுள்ளன. இதற்காக சர்வதேச சமூகம் சீனாவைப் பாராட்டி உள்ளது.

    உலகில் ஏற்பட்ட ஏராளமான உயிரிழப்புகளுக்கு சீனா மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அத்தகைய வழக்கு தொடர எந்த முன்னுரிமையும் இருப்பதாக எனக்கு நினைவில் இல்லை. 

    2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதற்கு அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×