search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ மந்திரி மார்க் எஸ்பர்
    X
    ராணுவ மந்திரி மார்க் எஸ்பர்

    அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் இந்தியா - பென்டகன் தகவல்

    இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ வர்த்தகம் இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    இந்தியாஅமெரிக்கா இடையிலான ராணுவ உறவு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவை தங்களின் முக்கிய ராணுவ கூட்டாளியாக அறிவித்தது.

    இந்த நிலையில் இந்தியாவுடனான எங்களது ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது என்றும் இந்த உறவானது, 21-ம் நூற்றாண்டில், அமெரிக்காவுக்கு முக்கியமானது என்றும் அந்த நாட்டின் ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் அதி வேகமாக வளர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    மேலும் பாதுகாப்பு தீர்வுகளில் இந்தியாவின் முதல் தேர்வாக அமெரிக்கா மாற முயற்சிக்கிறது என்றும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் இணைச் செயலாளர் எலன் எம் லார்டு கூறியதாவது:

    அமெரிக்கா-இந்தியா ராணுவ ஒத்துழைப்பு கடந்த 2 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டது. இந்த ஒத்துழைப்பு எங்கள் இரு அரசுகளுடனும் நெருக்கமான உறவுகளுக்கு வழிவகுத்தது. மேலும் இது இந்தோ பசிபிக் பிராந்தியத்திலும் நிலைத்தன்மையை அதிகரித்துள்ளது.

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கான அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு தீர்வில் இந்தியாவின் முதல் தேர்வாக மாற நாங்கள் முயற்சி செய்கிறோம்.

    அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் ராணுவ விவகார பணியகத்தின் கூற்றுப்படி 2008-ம் ஆண்டில் இந்தியாவுடனான அமெரிக்க ராணுவ வர்த்தகம் பூஜ்ஜியத்துக்கு அருகில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ராணுவ வர்த்தகம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது.

    இந்த விற்பனை இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான வேலைகளை அதிகரிக்கிறது. மேலும் இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில்துறை தளங்களை உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×