என் மலர்
உலகம்
ஓமனில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை எடுத்து வருவோருக்கு புதிய வழிமுறைகள் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு
- சாதாரண வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்.
- பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த தாமதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துபாய்:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகம், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் பொருட்களை (செக் இன் உடைமைகள்) கொண்டு செல்ல புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், விமான நிலைய செயல்திறனை அதிகரிக்கவும் பயன் உள்ளதாக உள்ளது. இதில் விமான பயணிகள் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கடுமையான அளவு மற்றும் எடை கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு இயக்கும் முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது பேக்கேஜ் கொள்கைகளை புதுப்பித்துள்ளன. அதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையில் 2 பைகள் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் சர்வதேச விமானங்களில் செக் இன் உடைமைகளில் மூலம் 2 பைகளை மட்டுமே எடுத்து செல்லலாம். கூடுதல் உடைமைகள் இருந்தால் அதற்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும்.
சாதாரண வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த உடைமைகள் 2 பைகளில் மட்டுமே இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் இந்தியாவில் இருந்து அமீரகம் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் போதும் 30 கிலோ வரை உடைமைகளை மட்டுமே எடுத்துச்செல்லலாம். பொருளாதார மற்றும் பிரீமியம் டிக்கெட்களுக்கு சாதாரண வகுப்பை விட கூடுதலாக பொருட்களை எடுத்துச்செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதிகமாக பயணிகளின் வருகை இருப்பதால் இந்திய விமான நிலையங்களில் நெரிசல் அதிகரித்து பாதுகாப்பு சோதனைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த தாமதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.