என் மலர்
உலகம்
சந்திரயானின் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்
- நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது.
- லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது.
வாஷிங்டன்:
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.
விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டது. 14 நாட்களுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமானதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டருக்கும் (எல்.ஆர்.ஓ.) விக்ரம் லேண்டருக்கும் இடையே ஒரு லேசர் கற்றை அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது. இந்த வெற்றிகரமான சோதனையானது நிலவின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக கண்டறிய வழி வகுக்கும்.
நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மேற்பரப்பில் பின்னோக்கி பிரதிபலிப்பை கண்டறிய முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இது வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்டமாகும்.
இவ்வாறு நாசா தெரிவித்தது.