என் மலர்
உலகம்

கடலில் விழுந்த டிராகன்.. சுற்றி வட்டமிட்டு சுனிதாவை வரவேற்ற டால்பின்கள்
- 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
- விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர்.
வாஷிங்டன்:
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, நால்வரும் பயணித்த டிராகன் கேப்சூல் படிப்படியாக வேகம் குறைந்து கடலில் விழுந்ததும், விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டால்பின்கள் சூழ்ந்தன.
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது கேமராக்களில் தெளிவாக தெரிந்தது. இதனை லைவ் செய்துகொண்டிருந்த நாசா விஞ்ஞானிகள் அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று கூறினர்.
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.
அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் நாசா அழைத்துக்கொண்டது.
விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.
விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார். பூமி மேல் பறக்கணும் என்ற ஆசையை அவர் நிறைவு செய்துள்ளார்.