search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அசரென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பொடோ ரோஸ்காவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன்

    மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வுல்புடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை டாரோ 7-6 (7-3) என போராடி வென்றார். இதனால் சுதாரித்து கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று முடிவடைந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை லூசியாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை லூசியா 6-4 என வென்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஒசாகா 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
    • 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விஷேச ஆடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகின்றன.

    அந்த வகையில் விழாவில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

    'கனவு நனவாகும்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் ஒரு அறிமுகமாக காலடி எடுத்து வைத்ததை மிக எதார்த்தமாக உணர்கிறேன். இந்த விழாவுக்காக 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது. இந்த கவுனை தானே தைத்ததாகவும் கூறி உள்ளார்.

    • கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
    • உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் சமீபத்தில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சாதிக் கான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுயேட்ச்சையாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தருண் குலாட்டியும் தோல்வியை சந்தித்தார்.

    அதேபோல் இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.மேலும் இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    • எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
    • காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சண்டைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழந்து வருவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின் றன. ஆனாலும் இஸ்ரேல் தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    சண்டை நீடித்து வருவதால் காசா முகாம்களில் உள்ள பொதுமக்கள் உயிர் பயத்தில் இருந்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட எதுவும் சரிவர கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசா நகரமான ரபாவில் தங்கி உள்ளனர். எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

    இங்கிருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ரபாவில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்வது போர் குற்றமாகும், காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தை யும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் வடக்கு காசாவில் மிகப்பெரிய அல்-ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று குருத் தோலை ஞாயிறையொட்டி காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

    • சமீப காலமாக மேக்ரான் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
    • நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குத்துச்சண்டை (பாக்சிங்) செய்வது போன்ற சில புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ புகைப்பட கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், ஒரு படத்தில் மேக்ரான் உறுதியான முகபாவத்தில் பற்களை கடித்து கொண்டிருப்பது போன்றும், மற்றொரு படத்தில் அவர் குத்துசண்டையில் கவனம் செலுத்துவதையும் காணமுடிகிறது.

    சமீப காலமாக மேக்ரான் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, சில எலும்புகளை கண்டார்
    • டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது

    பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ளது மோன்டோலியர் (Montouliers) காட்டுப் பகுதி.

    இப்பகுதியை சேர்ந்த தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Moschetti) இங்கு தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    கடந்த 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, அந்த மலைப்பகுதியில், புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டார்.

    இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வை தொடங்கினர்.

    ஆய்வுப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்தால், புதைபொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால் அப்பகுதி முழுவதையும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டது.


    சுமார் 2 வருட காலம் பல முறை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட பல்வேறு ஆய்வில், டேமியனால் கண்டறியப்பட்ட புதைவடிவம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை டைனோசரின் எலும்பு கூட்டின் 70 சதவீத புதைவடிவம் என தெரிய வந்தது.

    அது சுமார் 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    "கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக க்ரூசி நகரின் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இம்முறை கிடைத்திருப்பது அந்த உயிரினத்தின் உடலில் இருந்த 70 சதவீத பெரும்பாலான பாகங்கள்" என க்ரூசி அருங்காட்சியகத்தின் நிறுவனர், பிரான்சிஸ் ஃபேஜ் (Francis Fage) தெரிவித்தார்.

    • அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • சர்வதேச சட்டங்களை மீறி ஐரோப்பா வலிமை இழப்பதை விரும்பவில்லை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron), "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்திருந்தார்.

    மேக்ரானின் கருத்திற்கு பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக இருந்தது.

    இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசிற்கு (Czech Republic) சென்றிருந்த மேக்ரான், அந்நாட்டின் அதிபர் பீட்டர் பவெலை (Petr Pavel) சந்தித்தார்.

    இச்சந்திப்பிற்கு பிறகு மேக்ரான் தெரிவித்ததாவது:

    ரஷியாவை எதிர்க்கும் உக்ரைனை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

    ஆதரவு அளிக்கும் நாடுகள் கோழைகளாக கூடாது.

    நாம் கோழைகள் அல்ல என உறுதியாக உலகிற்கு தெரிவிக்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.

    இது நமது போர். நடப்பது நடக்கட்டும் என நாம் கண்டும் காணாமல் எவ்வாறு இருக்க முடியும்?


    அதனால்தான் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் துருப்புகளை இறக்க வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக அதை செய்வோம் என நான் முன்பு கூறினேன். அந்த நிலையில் நான் பின் வாங்க மாட்டேன்.

    நாம் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இல்லை.

    உக்ரைனில் நிலைமை சீரடைவதையே நாம் விரும்புகிறோம்; மோசமடைவதை அல்ல.

    சர்வதேச சட்டங்கள் எதையும் மீறி அதனால் ஐரோப்பாவின் நிலைமை வலிமை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு மேக்ரான் தெரிவித்தார்.

    • ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் மசோதா வெற்றி பெறும்.
    • ஆதரவு தெரிவித்து 780 வாக்குகள் பதிவானதால் மசோதா நிறைவேறியது.

    கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை தொடர்பான சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கருக்கலைப்பு செய்ய இனிமேல் சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை. பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.

    இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள செய்தியில் "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக நம்பப்படுகிறது. உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    கருக்கலைப்புக்கு ஆதரவானோர் இந்த செய்தியை கேட்டு பிரான்ஸ் ஈபிள் டவர் முன் குவிந்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் "என்னுடைய உடல் என்னுடைய தேர்வு" என்பதை வெளிப்படுத்தினர். மேலும் இந்த வாசகம் ஈபிள் டவரில் மின்விளக்கால் ஜொலித்தது.

    பிரான்ஸ் நாட்டில் 1974-ம் ஆண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிக அளவில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லை என கூற முடியாது என மேக்ரான் கூறியிருந்தார்
    • நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்தும் தொடர்கிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல், மாநாட்டிற்கு பிறகு நிருபர்களிடம், "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்தார்.

    மேக்ரானின் கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் கருத்து கூறி வந்தனர்.

    மேற்கத்திய துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் நிராகரித்தன. ஆனால், எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் நிராகரிக்கவில்லை.

    பிரான்சிலும் எதிர்க்கட்சிகளால் மேக்ரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

    மேக்ரானுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர், "உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் முடிவை மேக்ரான் எடுத்தால், அவரது படைக்கு நெப்போலியனின் ராணுவத்திற்கு ஏற்பட்ட கதிதான் நேரும்" என எச்சரித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான பணிகளை காணச் சென்ற மேக்ரானிடம் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது குறித்து மீண்டும் கேட்கப்பட்டது.


    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உக்ரைன் ஆக்கிரமிப்பு ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் குறித்த எனது கருத்துகள் சிந்தித்து கூறப்பட்டவை.

    நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சரிபார்க்கப்பட்டு, ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை.

    இவ்வாறு மேக்ரான் கூறினார்.

    ஆனால், தனது நிலை குறித்து மேலும் விவரங்கள் அளிக்கவோ அல்லது கருத்துகள் கூறவோ மேக்ரான் மறுத்து விட்டார்.

    நேட்டோ நாடுகளின் துருப்புகள் உக்ரைனில் இறங்கினால், உலகம் ஒரு அணு ஆயுத போரைக் காண வேண்டி வரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×